தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள COVID-19 நோயாளிகளுக்கு இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் தோன்றுதல் என்ற கூடுதல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சில கடுமையான நோய்வாய்பட்ட நோயாளிகளைக் காட்டிலும், COVID-19 நோயாளிகளுக்கு இரத்த உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் அதிகமாகக் கண்டறியப்பட்டதாக கொரோனாவின் ஆரம்பக் காலத்தில் சீனாவில் இருந்து வந்த சில ஆய்வு அறிக்கைகள் கூறின. “ஆனால் COVID-19 நோயாளிகளில், இந்த இரத்தல் உறைதல் பண்பை கடந்த மூன்று – நான்கு வாரங்களில் நாங்கள் கவனித்தோம். பின்னர் ஆய்வை விரிவாக்கியபோது இந்தப் போக்கு COVID-19 நோயாளிகளில் தெளிவாகக் காண முடிந்தது,” என்று கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தில் இருதய மருத்துவ உதவியாளரான பெஹ்னூட் பிக்டெலி எம்.டி., எம்.எஸ். கூறினார். இவர் ஒரு இரத்தம் உறைதல் துறையில் ஒரு நிபுணர் ஆவார். “உள்ளுக்குள் உறையும் இரத்தக் கட்டிகள் உடலின் மற்ற உறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். என் அனுபவத்தில், இது மிகவும் மோசமான நோய்களைக் கொண்ட நோயாளிகளில் நான் கண்டதை விட அதிகமாக இருக்கிறது” என்று பிக்டெலி கூறுகிறார். மேலும், “COVID-19 நோயாளிகளின் இரத்த சோதனை முடிவுகள் நான் கண்ட பிற நோயாளிகளை விட மிகவும் மோசமானதாக உள்ளது.” என்றார். மேலும், உறைந்த இரத்தக் கட்டிகள் மூளைக்கு செல்லுமானால், பக்கவாதம் ஏற்படவும், இதயம் நோக்கி சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தவும், நுரையீரளில் அடைப்பையும் ஏற்படுத்த முடியும், இதுமட்டுமின்றி, கீழ்நோக்கி நகர்ந்து பிற உறுப்புகளிலும், கால்களுக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பையும் ஏற்படுத்துகின்றன” என்பதை அவரது மருத்துவக் குழு பலமுறைக் கண்டிருந்தது என்றார்.
ஒருமித்த வழிகாட்டுதல்கள்
COVID-19 நோயாளிகளுக்கு ஏற்படும் இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒருமித்த வழிகாட்டுதல்களை உருவாக்க, உலகெங்கிலும் இருந்து இருதயவியல் மற்றும் இரத்தம் உறைதல் துறையை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவை பிக்டெலி மற்றும் மற்றொரு கொலம்பியா இருதயவியல் மருத்துவரான மகேஷ் மாதவன் MD உருவாக்கியுள்ளனர். “CUIMC இல் COVID நோயாளிகளைப் சிகிச்சை அளிக்க தொடங்கிய முதல் சில வாரங்களில், நாங்கள் ஏராளமான இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் தொடர்புடைய சிக்கல்களைக் கண்டோம்” என்று மாதவன் கூறுகிறார். “இது மற்ற குழுக்களை அணுகவும், அறிந்த தகவல்களை மறுபரிசீலனை செய்யவும், மேலும் கவனம் மற்றும் ஆய்வு தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணவும், மற்ற நிபுணர்களுடன் தொடர்புக் கொள்ளவும் வழிவகுத்தது.” என்று கூறினர்.
புதிய கொரோனா வைரஸ், இரத்தம் உறைதல் மற்றும் கட்டிகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. “சமீபத்திய சில ஆய்வு அறிக்கைகள் கொரோனாவிற்கும் இரத்தக் கட்டிகள் உருவாதல் மற்றும் இரத்தம் உறைதலுக்கும் நேரடி தொடர்புகள் இருக்கலாம் என கூறுகின்றன. இருந்தாலும், இது சைட்டோகைன் – CYTOKINE எனப்படும் ஒருவகை கிருமிகள் எதிர்ப்பு புரதங்களின் வேலை என்றும் கூறுகின்றனர். நமது உடலுக்குள் ஏதேனும் நோய் கிருமிகள் நுழையும் போது T-CELL எனப்படும் ஒருவகை இரத்த வெள்ளை செல்கள் சைட்டோகைன் – என்று அழைக்கப்படக் கூடிய ஒருவகை புரதங்களை உருவாக்கும். இந்த புரதங்கள் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டி செயல்பட வைக்கும். இந்த சைட்டோகைன் உருவாகும் செயல் ஒரு உடனடி மற்றும் விரைவான கிருமி எதிர்ப்பு செயல்பாடாக அறியப்பட்டுள்ளது. இந்த செயலுக்கும் இரத்தம் உறைதல் மற்றும் கட்டிகள் உருவாதல் சிக்கல்களுக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கலாம் என்று சில அறிக்கைகைள் கூறுகின்றன. ஆனால் இதுவரை உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை.
இதுமட்டுமின்றி, COVID-19 பாதிப்புகள் கடுமையாக உள்ள நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் டி-டைமர் – D-DIMER என்று அழைக்கப்படக் கூடிய புரதத்தின் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக இரத்தம் உறையும் அளவு மற்றும் கட்டிகள் உருவாகும் அளவை அளக்க பயன்படும் அலகாக செயல்படும் தன்மைக் கொண்டது. இதன்படி, இரத்தத்தில் மட்டுமின்றி உடலின் எந்த பாகத்தில் இரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகி இருந்தாலும் இந்த டி-டைமர் அளவு இரத்ததில் கூடும். எனவே COVID-19 நோயாளிகளில் கண்டறியப்பட்ட இந்த புரதத்தின் அளவு, இந்த நோயாளிகளின் உடலில் அதிக இரத்தக்கட்டிகள் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது.
புதிய மருத்துவ பரிசோதனைகள்
இரத்தம் உறைதல் மற்றும் மற்ற உறுப்புகளின் சேதத்தின் அபாயத்தைக் குறைக்க, சில மருத்துவர்கள் COVID-19 நோயாளிகளுக்கு அதிக அளவு இரத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் மருந்துகளை பரிந்துரை செய்துள்ளனர். நோயாளிகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஸிடி-ஸ்கேன் செய்ய முடியாத நிலைமை உள்ளது. எனவே “அடுத்தக் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை, நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை,” என்பதே தற்போதைய நிலைமை என்கிறார் பிக்டெலி. மேலும் கூறுகையில், “நாங்கள் உருவாக்கியுள்ள குழுவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் கருத்து என்னவெனில், கட்டிகள் உருவாகும் காரணம் கண்டறியப்படும் வரை, இரத்தம் நீர்த்துப் போகச் செய்யும் மருந்துகளை பரிந்துரைப்பதும், இந்தக் குழுவினரின் வழிக்காட்டுதல்களை பின்பற்றுவதுமே தற்போதைய ஒரே வழி,” என்றார்.
COVID-19 நோயாளிகளில் நாம் காணும் சுவாசக் குறைபாடு பொதுவாக பெரியவர்களுக்கான நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறு சார்ந்த நோய்கள் கொண்டவர்களுக்கு காணும் நிலைமை ஆகும். இந்த நோயாளிகளில் நாம் கண்டறிந்துள்ள சிரை – இரத்தக் குழாய்களில் உண்டாகும் இரத்தம் உறைதல் மாற்றுக் கட்டிகள் தோன்றுதல் என்பது தீவிரமான மற்றும் மனதிற்கு ஒவ்வாத ஒரு கடுமையான சூழ்நிலை ஆகு. இதனை “ Double whammy” என கொலம்பியாவின் இருதயவியல் பிரிவில் உள்ள எண்டோவாஸ்குலர் சேவைகளின் இயக்குநரான இருதயநோய் நிபுணர் சாஹில் பரிக் கூறுகிறார். மேலும், “கடுமையான பாதிப்புகளை கொண்டுள்ள COVID-19 நோயாளிகளுக்கு உண்டாகும் அதிக அளவிலான இரத்தம் உறைதல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் காண CUIMC இல் IMPROVE-COVID எனப்படும் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளோம். இதை வெற்றிகரமாக நிர்வகிக்க முடிந்தால், நோயுற்ற தன்மையையும் இறப்பையும் குறைக்க முடியும்,” என்றார். ” இந்த ஆய்வுகளில், இரத்தம் உறையாமல் தடுக்க கொடுக்கப்படும் நீர்த்துபோகச் செய்யும் மருந்துகள் மற்றும் கொரோனாவிர்க்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கும் இடையான வினைகள், அதன் விளைவுகள் போன்றவையும் ஆராயப்படும். மேலும், கொரோனாவிர்க்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு இரத்தம் உறைதல் அபாயத்தை அதிகரிக்க ஏதேனும் சாத்தியம் உள்ளதா எனவும் ஆராயப்படவுள்ளது. இறுதியாக, “நாங்கள் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்கிறோம். COVID-19 பற்றிய தேர்ந்த தகவல்களை அறியவும், வழிக்காட்டுதல்களை உருவாக்கவும் அறிவியல் சமூகம் வெளிப்படுத்தும் முனைப்பு மற்றும் முயற்சிகளை காணும்பொழுது எனக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது,” என்றுக் கூறி முடித்தார்.
தமிழில்: லயா