போபால்

த்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 நாட்களில் இந்தூரை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1687 ஐ தொட்டுள்ளது.  சுமார் 10 தினங்களுக்கு முன்பு வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரில் அதிக அளவில் பாதிப்பு இருந்தது.   அப்போது மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 20% மக்கள் இந்தூரில் உள்ளவர்கள் ஆவார்கள்.

தற்போது போபாலில் அதிக அளவு பாதிப்பு ஏற்படத் தொடங்கி உள்ளது.  கடந்த 5 , 6 தினங்களாகவே போபாலில் பாதிப்பு மற்ற நகரங்களை விட அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த மூன்று நாட்களில் இந்தூரில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1.75% உயர்ந்துள்ள நிலையில் போபாலில் 12.3% உயர்ந்துள்ளது.  இதையொட்டி போபால் நகரில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்நிலையில் இந்தூர் நகரில் இதுவரை 10000 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் இந்தூர் நகர ஆணையர் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் இந்த முடிவுகள் வந்தால் டில்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு அடுத்த இடத்தில் இந்தூர் வரலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.