சென்னை: சென்னையில் கொரோனா 3வது அலைiய எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொரோனா வார் ரூம் திறக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2வது வலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 3வது அலையின் தாக்கம் தொடங்கி இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தேவையான மருந்து மாத்திரைகள், ஆக்சிஜன் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்து உள்ளது.

இந்த நிலையில்,  சென்னையில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்க, துணை ஆணையர் தலைமையில் வார் ரூம் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வார் ரூம் என்ற கட்டுப்பாட்டு அறையை துவக்கியுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார்ரூமில் செயல்படத் துவங்கியுள்ளனர்.

இந்த வார் ரூம்மில் பணிபுரியும் காவலர்கள் கணினி செயல்பாடுகளிலும் மற்றும் சைபர் தொடர்பான விபரங்கள் பற்றி தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்கள்  சென்னை மாநகராட்சியிடம் இருந்து தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்று , அவர்கள் கடந்த 15 நாட்கள் யார் யாரைத் தொடர்பு கொண்டார்கள் என்ற அழைப்புகள் தொடர்பான தகவல்களை டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பெற்று, அதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.  இதன்மூலம் கொரோனா அதிகம் பரவும் இடங்களை அடையாளம் காணவும், வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் பரவுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும் உதவியாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை சென்னை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.