‘’இளையநிலா பொழிகிறதே..இதயமதில் நனைகிறதே’’ என்ற ‘பயணங்கள் முடிவதில்லை’ படப்பாடல், மோகன் என்கிற நடிகனை வெள்ளி விழா நாயகன் என்று பின்னாளில் கொண்டுகிற அளவுக்கு அச்சாரம் போட்ட பாடல்..

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தை பிரபலப்படுத்தி வேரூன்ற வைத்ததோடு,, அறிமுக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் என்று வெற்றிப்பட இயக்குநரையும் தமிழ்த்திரையுலகில் அழுத்தமாக பதியவைத்தது அந்த பாடலின் மகத்தான வெற்றி..

இளையராஜா, இந்த டியூனை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடுபனி படத்துக்காக போட்டு காட்டியபோது, அதனை நிராகரித்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா. ‘’இளையநிலா பொழிகிறது’’ டியூனுக்கு பதில் பாலுமகேந்திரா, செலக்ட் செய்தது, ‘’என் இனிய பொன் நிலாவே..’’ டியூன்..

இப்படி படங்களுக்காக உருவாக்கப்பட்டபோது ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்ட, டம்மியாக வைக்கப்பட்டிருந்த இளையராஜாவின் டியூன்களை, அறிந்து அதற்காகவே கதைகளை உருவாக்கி பாடல்களை வைத்து படமெடுத்து வெற்றியும் பெற்றார்கள். பாடல்களுக்காகவே வெள்ளிவிழா கண்ட வைதேகி காத்திருந்தாள் படம்கூட அந்த ரகம்தான்..

முக்கியமான விஷயம் என்னவென்றால், இளையராஜாவின் ஒவ்வொரு டியூனும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அதனைவைத்து யார், யார் எப்படி திரைப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே, அது போய் சேருகின்ற வீச்சு தீர்மானமாகிறது..

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தில், ஒரு ‘காலக்குறீயீடுக்காக பேக்கிரவுண்ட் பாட்டாக, ‘’சிறுபொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’’ என்ற பாடல். அவ்வளவு ஹிட். பழைய வரலாறு தெரியாத பலரும் சுப்பரமணியபுரம் படத்திற்காகவே போடப்பட்ட புதுப்பாடல் என்றே நினைத்தார்கள்.

ஆனால் 1980ல் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல் அது. கல்லுக்குள் ஈரத்தைவிட சுப்ரமணியபுரம்தான் உண்மையிலேயே மேற்படி பாடலுக்கு காட்சியமைப்பை பிரமாதப்படுத்தியிருந்தது.. இதுதான் இளையராஜாவின் தனித்துவம். எந்த நாளிலும் கெடாத அளவுக்கு அவ்வளவு அற்புமதமாக பாடல்களை சமைத்திருப்பார். ஆனால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவேமாட்டார். இசையுலகத்தில் புகுந்தால் அவருக்கு வெளியுலகம் புரியவே புரியாது..

1976ல் அவரின் முதல் படமான அன்னக்கிளியின் பாடல்கள் அவ்வளவு ஹிட்.. துள்ளலான ‘’மச்சானை பாத்தீங்களா….’’ ஏக்கத்தை பிழிந்த ‘’அன்னக்கிளி உன்னை தேடுதே…’’, கல்யாண வீட்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய ‘’குத்தச்சம்பா பச்சிரிச்சி குத்தத்தாவேணும்…’’ என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. ஆனால், எல்லாமே நூறு சதவீத கிராமியத்து மணம்.. யாருய்யா இந்த இளையராஜா என்று சினிமா இண்டஸ்ட்ரியே மண்டையை பிய்த்துக்கொண்டது..

ஆனால் பத்திரிகை உலகின் ஜாம்பவானான ஆனந்த விகடன் பத்திரிகைக்கு இளையராஜா என்ற ஜீவனே கண்ணுக்குத்தெரியாமல் போனது. தேனிக்கு பக்கத்திலிருக்கும் ( தேனியே அப்போது ஒரு கிராமம்தான்) பண்ணைபுரம் என்ற மலைக் கிராமத்திலிருந்து வந்திருக்கும் ஏதோ ஒரு மொக்கப்பீசுக்கெல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று ஆ.வி. நினைத்திருக்கலாம்.

ஆனால் இளையராஜாவோ, இதுமாதிரி விஷயத்தையெல்லாம் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அன்னக்கிளியே முதல் படம். அதற்கு முதன் முதலாய் இசைமைக்க உட்கார்ந்த உடனேயே ரெக்கார்டிங் தியேட்டரில் பவர் கட்..அதையே பெரிய அபசகுனமாக எடுத்துக்கொள்ளாமல் இசையை மட்டுமே கவனித்தவர் இளையராஜா.

அதே நேரத்தில், அன்னக்கிளி வெளியான கையோடு, ரேடியோவில், அடுத்துவருவது அன்னக்கிளி படத்திலிருந்து பாடல் என வீட்டு ரேடியோவில் சாமான்யர்கள் ஆர்வத்துடன் கேட்டு உற்சாகமடைவதை, சென்னை பெசன்ட் நகர் சர்ச் பக்கம் வாக்கிங் போகும்போது பலமுறை பார்த்து உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷப்பட்டுக்கொள்வார் முகம் பிரபலம் அடையாத இளையராஜா.

வெற்றிக்கொடி நாட்ட வேண்டியது பல இசைமேதைகள் துவம்சம் செய்த தமிழ் சினிமாவில் என்ற அச்ச உள்ளுணர்வை மட்டும் அலட்சியப்படுத்தவில்லை..

 

இன்றைக்கு உலகமே போற்றும் இசைஞானி, தனக்காக இசையை கற்றது மிகப்பெரிய இசைப்பல்கலைக்கழகங்களில் அல்ல. தமிழ் சினிமாவின் இசைப் பிதாமகன் ஜி.ராமநாதனை மனதில் வைத்தே சிறுவன் ஏகலைவனாய் கற்ற பாலபாடம் அது…

கப்பலோட்டிய தமிழன் படத்தில் காற்றுவெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணித்தவிக்கின்றேன் என்ற கடினமான பாட்டுக்கெல்லாம் அவ்வளவு இனிமையாய் ஜி.ராமநாதன் எப்படி இசையமைத்தார் என்ற கேள்வி தன்னை பல நாட்கள் தூங்கச்செய்யவில்லை என இளையராஜாவே பல முறை சொல்லியிருக்கிறார்.

அப்படி, சாமான்ய மக்களின் இசை ஜாம்பவானின் தாக்கம் இளையராஜாவை ஆட்டிப்படைத்தது. அதன் விளைவுதான், அறிமுக காலகட்டத்தில் சாமான்ய மக்களின் மண்ணின் தன்மைக்கு மகுடம் சூட்டுவதிலேயே குறியாக இருந்தார் இளையராஜா,

தமக்கு கிடைத்தது பெரிய பேனர்கள் இல்லையென்றாலும் தன் இசையமைத்த சிறிய படங்களை தனது பாடல்களுக்காக பேசவைத்தார்..

சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் பலருக்கும் தெரியும். ஆனால் ரஜினி, தேவி நடித்த கவிக்குயில் என்ற படமென தெரியாது. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை பாட்டு தெரியும் பத்ரகாளி படம் தெரியாது. இப்படி 1970களில் வெளியாகி இன்றளவும் இளையராஜாவின் பாடல்களுக்காக மட்டுமே பெயர்கள் வெளியே சொல்லப்படும் படங்களின் எண்ணிக்கை ஏராளம்.

இளையராஜா வந்த நேரம், எம்ஜிஆர், அரசியலில் தீவிரமாகி முதலமைச்சராக ஆகும் கட்டத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததால், சினிமாவில் முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்ட நேரம்.. சிவாஜி மட்டுமே அப்போது டாப் ஸ்டார். கமல் ரஜினி போன்றோர் வளர்ந்து வந்தார்கள். ஆனால் மூவரும் இளையராஜாவிடம் இருந்த புதுமையை  அலட்சியப்படுத்தவேயில்லை.

 

இளையராஜாவின் முதல் படத்தின் இரட்டை இயக்குநர்களான தேவராஜ்-மோகன்தான் இரண்டாவது மூன்றாவது படங்களையும் வாய்ப்பாக தந்தனர் அதே நேரத்தில் இளையராஜாவை முதன் முதலில் அண்டிய ஜாம்பவான் இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர்தான். சிவாஜி, ஜெமினியை வைத்து பல படங்களும், எம்ஜிஆரை வைத்து அன்பே வா படத்தை இயக்கிய அதே மேதை..

பத்ரகாளி படத்தில் இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து, புதுமையை உணர்ந்த ஏசி திருலோகச்சந்தர், சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராயிற்றே,.. பத்ரகாளியில் ராஜாவின் திறமை, வேகம், தனித்துவம் போன்றவை சொல்லப்பட, இளையராஜாவின் ஐந்தாவது படமே நடிகர் திலகத்திடமிருந்து வசப்பட்டுப்போனது.

எம்எஸ்வி, கேவிஎம்மை நம்பியிருந்த சிவாஜி, தீபம் படத்திற்கு இளையராஜா இசையை டெஸ்ட்டாகத்தான் பார்த்தார். படம் வெளியாகி, அந்தப்புரத்தில் ஒரு மகராணி என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. பலரும் ;;எம்எஸ்வி இசைன்னா இசைதான்யா’’ என்று புளங்காகிதப்பட்டார்கள். ஏனெனில் எம்எஸ்வியின் தாக்கம் அந்த அளவுக்கு வியாபித்திருந்தது..

வாலியின் மெகா ஹிட் பாடல்களெல்லாம் எப்படி கண்ணதாசன் எழுதியதாக நினைத்துக்கொண்டு அவர் கணக்கில் சேர்த்தார்களோ, அப்படித்தான் இளையராஜாவின் இசை, எம்எஸ்வி கணக்கில் போய்சேர்ந்தது. கவிக்குயில், தியாகம், புவனா ஒரு கேள்விக்குறி, நான் வாழவைப்பேன் படங்களெல்லாம்  இப்படித்தான், ‘’அடேய் இதெல்லாம் இளையராஜா டியூன் போட்டதுடா’’ என்றால் சுலபத்தில் நம்பமாட்டார்கள்.

ஏ.சி. திருலோகச்சந்தரை தொடர்ந்து எஸ்பி முத்துராமன், ஸ்ரீதர் போன்ற மாபெரும் இயக்குநர்கள் இளையராஜாவிடம் ஓடிவந்தனர்.

இருந்தபோதிலும் இளையராஜாவை, தமிழ் சினிமாவில் தனியாக பிரித்து பேசவைத்தவர் இயக்குநர் பாரதிராஜாதான். 1977ல், பதினாறு வயதினிலேவில் தொடங்கிய இரு ராஜாக்களின் காம்பினேஷன், உண்மையிலேயே அற்புதமானது..

பதினாறு வயதினிலே படத்தில் டைட்டில் ஆரம்பிக்கும்போதே, ‘’சோளம் விதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…’’என்று இளையராஜாவின் குரல் திரையில் ஒலிக்கும்.. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து 36 ஆண்டுகளுக்கு பிறகு நிஜமாலுமே மேலும் ஒரு புதுப்பாதை பிறக்கிறது என்று மெய்சிலிர்க்க வைத்தபடியே சொன்ன தருணம் அது..

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தனது முதல் ஐந்து படங்களை வெள்ளிவிழாவாக கொடுத்த சாதனையாளர் இயக்குநர் பாரதிராஜா. இதற்கு பலமான முக்கிய பின்னணி, இந்த படங்களின் அனைத்துப்பாடல்களும் மெகா ஹிட் அடிக்கவைத்த இளையராஜாவின் முற்றிலும் புதுமையான இசை..

கிராமிய மணத்துக்காக பேசப்பட்ட இளையராஜா, மாநகரத்து கிரைம் திரில்லான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் மேற்கத்திய இசையிலும் ரசிகர்களை வாயடைக்கவைத்தார். ‘’நினைவோ ஒரு பறவை’’ என்று கமல் பாடும் பாடலாகட்டும், ‘’இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததே’’ என மலேசிய வாசுதேவன் பாடும் பாடலாகட்டும், 40 வருடங்கள் ஆனாலும் இன்றும் அவ்வளவு ஃபிரஷ்தான்.. 400 வருடங்கள் ஆனாலும் ஃபிரஷ்ஷாகத்தான் இருக்கப்போகின்றன. அதன் இசைக்கோர்வைகள் அப்படி நேர்த்தியாக கட்டப்பட்டவை.

ஆரம்பகாலத்தில் இளையராஜா தனக்கான திரையிசைப்பயணத்தை வகுத்துக்கொண்ட விதம் சிக்கலே இல்லாதது. மிகவும் மதிநுட்பம் வாய்ந்தது.

எம்ஜிஆர். சிவாஜி போன்ற டாப் ஸ்டார்கள் படங்களில் டிஎம்எஸ்சுக்கு சரியான ஜோடி பி.சுசிலாதான் என்று பல இசையமைப்பாளர்கள் எஸ்.ஜானகிக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டியே வைத்திருந்தனர். அதே ஜானகியை தேர்ந்தெடுத்த இளையராஜா, செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே பாடலை பாடவைத்து சிறந்த பின்னணிப்பாடகி என தேசிய விருதையே அவருக்கு வாங்கித்தந்தார்.

புதியதாக ஜென்சி என்ற தேனருவியையும் தன் படையில் சேர்ந்துக் கொண்டார். டிஎம்எஸ் – பி.சுசிலா ஜோடிக்கு அடுத்தகட்டமாக ஜானகி-எஸ்பி பாலசுப்ரமணியம் என்ற டிரெண்ட்டை உருவாக்கினார். எஸ்பிபிக்கு மாற்றாக அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள கே.ஜே. யேசுதாஸ் மற்றும் மலேசிய வாசுதேவன் ஆகியோரையும் தயாராக இருக்கவைத்துக்கொண்டார். இப்படி சகல பரிவாரங்களோடு 1970களின் இறுதியில் இளையராஜா கிளப்பிய வண்டியின் வேகம் இருக்கிறதே… பின்னணி இசைக்கு புதிய பாதை அமைத்து அதில் செய்த சாதனைகளை சொல்லும்போதுதான் புரியவரும்.. மோகன், ராமராஜன், ராஜ்கிரண் போன்றோருக்கெல்லாம் இந்த பூமியில் ஒரே கடவுள் என்றால் அது இளையராஜதான்..

அடுத்த நிறைவு பாகத்தில் அதை பார்ப்போம்…