சென்னை: ரஷியா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.40 அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா இன்று 14வது நாளாக போர் நடத்தி வருகிறது. உலகின் சமையல் எண்ணையை பூர்த்தி செய்வதில் உக்ரைன் நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள போர் காரணமாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எண்ணை விலை உயரத் தொடங்கி உள்ளது.
அதுபோல ரஷியாவில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணை விலையும் பல இடங்களுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், சமானிய மக்களின் உணவுப்பொருளான சமையல் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி விலை வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளது.
உக்ரைன் போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.165 முதல் 178 வரை தற்போது விற்கப்படுகிறது.
அதுபோல லிட்டர் ரூ.125க்கு விற்கப்பட்ட பாமாயில் விலை ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்து வருவதால் விற்பனை சரிந்துள்ளது. மேலும் கோதுமை விலையும் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டைக்கு ரூ,100 உயர்ந்துள்ளது. இதனால் மைதா, ரவை ஆகியவற்றின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தலைவிகள் கவலை அடைந்துள்ளனர்.
உக்ரைன் போர்: சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்திய இல்லத்தரசிகள் அச்சம்…