சாம்ராஜ்நகர்
ஊரடங்கு நேரத்தில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிரஞ்சன் குமார் மகனான புவன்குமார் குதிரையில் சவாரி செய்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
கொரோனா நாடெங்கும் வேகமாகப் பரவி வருவதால் மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இதையொட்டி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நக்ர் மாவட்டத்தில் அமைந்துள்ள குண்டுலுபேட்டை தொகுதியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஊரடங்கு நேரத்தில் மக்கல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனத் தொலைக்காட்சிகளில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
ஆனால் அவருடைய மகனான புவன்குமார் சில தினங்களுக்கு முன்பு மைசூர் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் திரைப்படங்களில் வருவது போல் குதிரை மீது அமர்ந்து வேகமாகச் சவாரி செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கன்னட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. முகக் கவசம் கூட அணியாமல் பவன் குமார் குதிரை சவாரி செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமூக வலைத் தளங்களில் புவன்குமார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்னும் பதிவுகள் குவிந்து வருகின்றன. இது குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நிரஞ்சன குமார், “இந்த சம்பவம் நான் ஊரில் இல்லாத நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நான் இது குறித்து விசாரணை நடத்தி என் மகன் மீது தவறு இருந்தால் நிச்சயம் கண்டிப்பேன். ஊரடங்கின் போது குதிரையில் சவாரி செய்யக்கூடாது என விதிகள் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.