சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர் குறித்து இன்று காரசார விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய பெயர்கள் பாராளுமன்றத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன” என்றார்.
நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்து, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மத்தியஅரசு விரிவான பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றும் விசாரணை நடைபெற்றது.
வழக்கின் விசாரணைக்கு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய பெயர்கள் பாராளுமன்றத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு பெயரிட்டுள்ளனர். அவர்களின் விருப்பம் பெயர்களில் காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை. மேலும், இதில் எந்த உரிமையும் பாதிக்கப்படவில்லை” அது சட்டங்களை அதன் விவேகமான முறையில் பெயரிடுகிறது என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “அரசியலமைப்பின் 348 வது பிரிவின்படி, அனைத்து அதிகாரப்பூர்வ உரைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். புதிய சட்டங்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வ நூல்கள், அவை பெரும்பாலும் வழக்கறிஞர்களால் மேற்கோள் காட்டப்படும். எனவே, பெயர்களும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்” என்றார்.
இதனை மறுத்த சுந்தரேசன், ““புதிய சட்டங்களின் பெயர்களும் ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதால் ஆங்கிலத்தில் இருந்தன. காலம் செல்லச் செல்ல பொதுமக்களும், வழக்கறிஞர்களும் புதிய பெயர்களுக்குப் பழகிவிடுவார்கள். இந்த பெயர்கள் நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் அடிப்படை உரிமைகளை பாதிக்காது” என்றார்.