சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குஜராத் மக்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகள், குஜராத் மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குஜராத் வன்முறை காட்சிகளை நீக்க படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால்  முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மவுனம்  காப்பது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து  விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் வைக்கப்பட்டதால் வலதுசாரி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் எனவும் தெரிவித்தனர்.

அதன்பின் சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இருந்தபோதும் இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவொரு கோரிக்கையும்  வைக்கப்படவில்லை.

இதனால், சர்ச்சைக்குரிய முல்லைபெரியாறு தொடர்பான காட்சிகளை  நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் எம்புரான் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளது.

. இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை வெளியிட்டு படக்குழுவினரிடம் அதனை நீக்க வலியுறுத்தினோம். இதுவரை நீக்கப்படவில்லை. ஆனால் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக 17 காட்சிகளை நீக்கி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர் .

அப்படியானால் தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு இல்லையா? தமிழினத்திற்கு எதிரான கருத்துகளை உமிழும் வகையில் திரைப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு இந்த திரைப்படத்தை தணிக்கை செய்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியாக இருக்கும் முல்லை பெரியாறு அணையால் ஆபத்து; அதனைத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து இடம் பெற்றுள்ளதால் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; எம்புரான் திரைப்படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ‘சிட் பண்ட்’ நடத்தி வரும் கோகுலம் கோபாலனின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் மலையாள திரைப்படமான எம்புரான், அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்த எம்புரான், கொள்கை அரசியலையும் கேரளத்தின் கள அரசியலையும், வீரியமாகப் பேசுவதோடு, மத அரசியலின் அபாயத்தையும் ஆழமாக விவாதிக்கிற ஒரு படம்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்ததாக காட்டப்படும் ஒரு மதக் கலவரம், அதனால் வன்முறைக்கும், படுகொலைக்கும் ஆளாகும் சிறுபான்மை மக்கள், அதை கொடூரமாக அரங்கேற்றியவர்கள், கேரளத்தில் அரசியல் தலைவர்களாக மாறி நிற்பது, பின்னர் அவர்கள் கேரளாவைக் குறிவைப்பது என கவனமாகவும், நுட்பமாகவும் கதையைத் தொடங்கிய திரைக்கதை ஆசிரியர் முரளி கோபியின் பேனாவை, அவ்வப்போது பிடுங்கிய படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை கக்க வேண்டிய தேவை எங்கே வந்தது என்பதுதான் நமது கேள்வி.

பான் இந்தியா படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து, செனகல், வட இந்தியா என சுற்றி வரும் திரைப்படம், கடைசியில் நெடும்பள்ளி டேம் என்று மாற்றுப்பெயரிட்டு, முல்லைப் பெரியாறு அணையில் வந்து நிற்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது. பழங்குடிகள், காடுகள், மாவோயிஸ்டுகள் என்று ஆழ ஊடுருவும் படம், சர்வதேச போதை கும்பல்களை பற்றியும் எடுத்துச் சொல்லிய நிலையில், எங்கே வந்தது முல்லை பெரியாறு..? அசுரனில் நாம் ஆழமாக நேசித்த அந்தக் கதாநாயகி மஞ்சு வாரியார், தன்னுடைய வாயால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும், பிரிட்டிஷ்காரர்களையும் பொது மேடையில், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் பேச்சு உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒன்று.

கேரளாவில் நடக்கும் ஒரு கேடுகெட்ட அரசியலுக்கு, பலிகடாவாக முல்லைப் பெரியாறு அணையை மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. ‘முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்துநிற்கிறது என்று ஒரு வசனம்..!!!’. ‘இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை,அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம்..!!!’ (அதாவது ஒரு குறிப்பிட்ட மதவாத கும்பல் அணையை குண்டு வைத்து தகர்க்க சதி செய்வதாக,கதாநாயகன் கொண்டுவரும் ஒரு செயற்கையான முன்னோட்டத்திற்காக வைக்கப்பட்ட ஒரு காட்சி) ‘அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்று ஒரு வசனம்..!!!’ என படத்தின் மொத்த களத்தையும் அடித்து நொறுக்குகிறது மேற்கண்ட வசனங்கள்.

பிரித்திவிராஜ் சுகுமாரன் தமிழ் திரையுலகத்தின் மூலமாகத்தான் தன்னுடைய அடையாளத்தை பெற்றார் என்பதை கேரளத்து ரசிகர்களே மறக்காத நிலையில், மறுபடியும் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை மீது அவர் கை வைப்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துகளை வைத்திருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிருத்திவிராஜனின் இந்த இனவெறிக்கு பலியாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. தமிழகத்தில் எம்பிரான் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எவரும் அந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக காட்டப்பட்டு இருக்கும் எந்த பிம்பத்தையும் விமர்சிக்காதது நமக்கு வருத்தமே.

180 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பான் இந்தியா திரைப்படம், போகிற போக்கில் முல்லைப் பெரியாறு அணை மீது கை வைத்து தன்னுடைய இனவெறியை வெளிப்படுத்தி இருப்பது இரு மாநில உறவை கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிரித்துவிராஜ் மறந்துவிடக்கூடாது. அழியாத கோலங்கள் என்று காலத்தை வென்ற திரைப்படங்களை நாங்கள் எடுக்கும் போது, நீங்கள் அஞ்சரைக்குள்ள வண்டி என்று திரைப்படம் எடுத்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

கேரளத்து இடதுசாரிகளை திருப்திப்படுத்துவதற்காக, வலதுசாரிகளின் மீது கைவைத்து, 18 காட்சிகளை வெட்டுவதற்கு சம்மதித்த படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரையிடாவிட்டால், கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக, முதல் முற்றுகை போராட்டத்தை தொடங்குவோம். பின்னர் அதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்படும்.

கொடுமை என்னவென்றால் மலையாளத்தில் வெளியான அதே 27ஆம் தேதி, தமிழகம் முழுவதும் படம் வெளியாகி இருக்கிறது என்பதுதான். பிரித்திவிராஜ் சுகுமாரன், மோகன்லால், மஞ்சு வாரியார், டோவீனோ தாமஸ், பாசில், விவேக் ஓபராய், கோகுலம் கோபாலன் உள்ளிட்டவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய ஒன்று.. தமிழகத்தில் உங்களுக்கு சொந்தமாக ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் தயவு செய்து அதை விற்றுவிட்டு கேரளாவில் போய் முதலீடு செய்யுங்கள்.. ஈவு இரக்கமற்று, தமிழர்களின் வயிற்றில் அடிக்கிற, தமிழர்களின் சொத்துக்களை சூறையாடுகிற, தமிழர்களின் நிலத்தை அபகரிக்கிற, கனிம வளங்களை கொள்ளையடிக்கிற.. மலையாள வன்மத்தின் இன்னொரு பரிணாமம் இந்த எம்புரான் எனும் செல்லுலாயுடு குப்பை.

இவ்வாறு பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியுள்ளார்.

 எம்புரான் படத்தில் இருக்கும் முல்லைப்பெரியாறு தொடர்பான காட்சிகளை நீக்குமாறு தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாளப் படம் ‘எம்புரான்’. 2019-இல் வெளியாகி வெற்றிகண்ட லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. பிரித்திவிராஜ் நடித்து இயக்கிய இப்படத்திற்கு, முரளி கோபி கதை எழுதியிருக்கிறார். மார்ச் 27ஆம் தேதி வெளியான ’எம்புரான்’ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் எம்புரான் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழர் வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாகர்கோவில், தென்காசி, கம்பம், போடி, பொள்ளாச்சி, கோவை என தெற்கில் இருந்து வடக்கு வரை கணிசமாக தமிழ் நிலத்துடன் தொழில், சுற்றுலா ரீதியில் கேரள மாநிலம் தொடர்பில் இருக்கிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இரு மாநில மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும், மலையாளிகள் இடம் பெயரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

இப்படி சகோதரத்துடன் தமிழர்களும், கணிசமான மலையாளிகளும் இருந்து வரும் நிலையில், மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தி வருவது என்பது கடும் கண்டனத்துக்குரியது.

மலையாள இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, கூடவே தமிழின வெறுப்பையும் சுமந்துக் கொண்டே செல்கின்றனர். இதன் காரணமாகவே, அவர்கள் பணியாற்றக்கூடிய மலையாள திரைப்படங்களில் தமிழின வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

மலையாள இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கிய “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” காதல் திரைப்படத்தில், இலங்கை அமைதிப்படையை ஆதரித்தும், ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் காட்சி சம்மந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருந்தது.

தென் தமிழக விவசாயிகளின் சோற்றில் மண்ணை போடும் விதமாக “முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும்” என்கிற பிரச்சாரத்தை வலியுறுத்தி சோஹன் ராய் என்ற மலையாளி ‘டேம் 999’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தமிழர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கிய ’இனம்’, ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பை நியாயப்படுத்திய ‘மெட்ராஸ் கஃபே’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் சான்றாக இருக்கிறது.

இத்திரைப்படங்களின் வரிசையில், கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. குறிப்பாக, நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டானாம். மன்னராட்சியும் போய் விட்டதாம். ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்பதாக நடிகை மஞ்சு வாரியர் பேசும் வசனம் தமிழின காழ்ப்புணர்ச்சியின் உச்சம்.

மேலும், இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை.

அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன. தமிழின வெறுப்பை உமிழும் இதுபோன்ற திரைப்படங்கள், தமிழ்நாடு, கேரள மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குழைத்து, இருமாநில உறவை கெடுக்கும்.

எனவே, எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.” என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

எம்புரான் சினிமாவில் குஜராத் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி ஏற்கனவே இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. எம்புரான் சினிமாவை தடை செய்யவும் வலியுறுத்துகின்றன. இதனால் எம்புரான் திரைப்படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை இந்த படம் தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காத நிலையில், மிழ்நாட்டு விவசாயிகளும் எம்புரான் சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.