ஐதராபாத்: நடிகை சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசின் பெண் அமைச்சர் சுரேகாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வாய் தவறி பேசிவிட்டேன் என மன்னிப்பு கோரியுள்ளார்.
நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகள் குறித்தது சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல சினமா நட்சத்திரங்களான நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இந்த ஜோடி கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து அறிவித்தது. அதன்பிறகு நடிகை சமந்தா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபாலாவை திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகளையும், வி.ஆர்.எஸ். கட்சியின் செயல்தலைவரும், தெருங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமராவையும் தொடர்புபடுத்திப் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா விமர்சனம் செய்திருந்தார். அதாவது, தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கேடிஆர்தான் சமந்தா விவாகரத்துக்கு காரணம் என்றும், நாக சைதன்யாவின் குடும்பத்தினர், சமந்தாவை கேடிஆருடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாகவும் அதன் காரணமாகவே சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், நடிகைகளின் தொலைபேசி உரையாடலை ராமராவ் ஒட்டுக்கேட்டார் என்றும் அதை வைத்து அவர்களை மிரட்டினார் என குற்றம் சாட்டியதுடன், கே.டி.ராமாராவ் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது பல ஹீரோயின்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளார். ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கியது இவர்தான். சினிமா துறையில் இருந்து சிலர் விலகி இருப்பதற்கும் அவர்தான் காரணம். என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த கருத்துக்கு நாகர்ஜூனா உட்பட நாக சைதன்யாவின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை சமந்தாவும், தனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்த என்றும் அதில் எந்த அரசியல் சதியும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் தயவுசெய்து தனது பெயரை அரசியலில் இழுக்க வேண்டாம் என்றும் தான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள் என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல் முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் அமைச்சர் சுரேகா 24 மணி நேரத்திற்குள் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் சுரேகா சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக கூறிய தனது கருத்து தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் என்னுடைய அரசியல் பயணத்தில் இதுவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசியது இல்லை. சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்த அப்படிப் பேசவில்லை. ஆதாரம் இல்லாமல் நான் அப்படிப் பேசமாட்டேன். எனது கருத்து அவர்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமந்தா, எனது கருத்துகள் ஒரு தலைவர், பெண்களை இழிவுப்படுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் போற்றுதலுக்குரியது. நீங்கள் அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள்.
கே.டி.ஆர். குறித்து விமர்சனம் செய்யும் அவசரத்தில் வாய் தவறி பேசிவிட்டேன். எனது பேச்சால் சம்பந்தபட்டவர்களின் மனம் புண்பட்டதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது கருத்துகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ மனம் புண்பட்டிருந்தால் அந்த கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன். அரசியல் கண்ணோட்டத்திலோ அல்லது வேறுவிதமாகவோ இதை பெரிதாக்க வேண்டாம்.
ஆனால் பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.டி.ராமராவ் மீதான தனது குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் கேடிஆர் என்று அழைக்கப்படும் திரு ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு சுரேகா கேட்டுக் கொண்டுள்ளார்.