’60 – ’70-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை காஞ்சனா.

இவர் கடந்த 4ம் தேதி, ஏவிஎம் சரவணன் மறைவிற்கு ஆட்டோவில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

முன்னணி நடிகையாக இருந்த காஞ்சனா ஆட்டோவில் வந்தது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமாக தவறான தகவல்களை எழுதினர்.

இதற்கு கவிஞர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இது போல் தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாகவது, “சமூக வலைதளத்தில் பகிரப்படுவது மிகவும் தவறான தகவல்.

காஞ்சனா அம்மாவோட இன்றளவும் நானும், என் மனைவியும் நட்போடு இருக்கிறோம். பழகுறதுக்கு ரொம்ப தங்கமானவங்க.

அவங்க அவங்களுடைய சகோதரியுடைய மகன் வீட்ல தி. நகரில் தான் இருக்காங்க. அந்த வீட்டு அந்த அப்பார்ட்மெண்ட் அவங்க இடத்துல கட்டினது அவங்களுக்கு வாடகை மட்டுமே கிட்டதட்ட ஒரு 2 லட்சம் ரூபாய்க்கு மேல வருது.

தினசரி ஆட்டோவில் வந்து அகஸ்தியர் கோவில் வாசலில் உள்ள கடையில் கோயிலுக்கு பூ வாங்குவாங்க.

தினமும் 600 ரூபாய்க்கு …. கார் டிரைவர் எனக்கு தேவையில்லை, நான் காலைல ஒருவாட்டி வெளில போவேன், சாயந்திரம் ஒரு வாட்டி வெளில போவேன்.. அவ்வளவுதான்.

கோவிலுக்கு தான் போவேன். எனக்கு எதுக்கு கார், டிரைவர் என்று சொல்வார், அதனாலேயே அவர் ஆட்டோவில் செல்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

விமான பணிப்பெண்ணாக தனது வாழ்க்கைப் பயணத்தை துவங்கிய நடிகை காஞ்சனா பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களால் காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தெலுங்கில் என்டிஆர், நாகேஸ்வர ராவ் என பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

200 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர் தனது சம்பாத்தியத்தில் தி. நகரில் சொந்தமாக வாங்கிய இடங்களை அவரது உறவினர்கள் ஏமாற்றி அபகரித்த நிலையில் வழக்கு தொடர்ந்த அவர், தனது சொத்து தனக்கு மீண்டும் கிடைத்தால் அதை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுவதாக வேண்டிக் கொண்டுள்ளார்.

அந்த சொத்து அவருக்கு உரிமையானது என்று நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன், தான் வேண்டிக் கொண்டது போலவே தி.நகரில் தனக்கு சொந்தமான ரூபாய் 80 கோடி மதிப்பிலான சொத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துள்ளார். அந்த இடத்தில் தான் தற்போது திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பத்மாவதி கோயில் உள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமலே தனது வாழ்வை கழித்துவிட்ட நடிகை காஞ்சனா தற்போது தனது சகோதரியின் பராமரிப்பில் சென்னையில் வசித்து வருகிறார்.