பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு பதவியேற்ற இரண்டு நாட்களில், அவரின் அமைச்சரவை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழல் புகாரில் சிக்கிய மேவாலால் செளத்ரி என்ற ஜேடியு சட்டமன்ற உறுப்பினரை, கல்வி அமைச்சராக ஆக்கியுள்ளதுதான் நிதிஷ்குமாரின் மீதிருந்த குற்றச்சாட்டு.
கடந்த 2017ம் ஆண்டு காலக்கட்டத்தில், பகல்பூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, இந்த மேவாலால் செளத்ரி இருந்தபோது, அவர்மீது பெரியளவில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஜூனியர் ஆராய்ச்சியாளர்களை நியமித்ததில், பெரிய முறைகேடு எழுந்ததாக இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், அந்த வழக்கில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையிலேயே, இவர் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதுதான் கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி, இந்தப் பிரச்சினையை பெரியளவில் எழுப்பி வருகிறது. மேலும், சிறுபான்மை சமூகத்தவருக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.