விழுப்புரம்:  நடிகை  நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அதுபோல, சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சை கண்டித்து விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அவரின் உருவ பொம்மை எரித்து இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை திமுக அரசு தடுக்கத் தவறியதாகவும் கூறி, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி திடலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள புதிய திட்டமான உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்தவர், எனது கனவு நடிகை நயன்தாரா என்றும்,  எனது கனவை நிறைவேற்றுவாரா  கூறியிருந்தார். இவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், சி.வி.சண்முகம் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தேர்தல் களத்தில் கருத்து ரீதியாக கொள்கை ரீதியாக கட்சிகள் எப்படி வேண்டு மானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டி இருக்கிறது, ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.

மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்?

இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும்? அப்படி இருக்க சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம். தங்களிடமிருந்து மன்னிப்பும், இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதும், இதுவே போதும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்தான். ஒரு பெண் நடிகரைப் பற்றி நீங்கள் சாதாரணமாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அந்த உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால், நீங்கள் இதேபோல் பேசுவீர்களா?

மக்கள் இதுபோன்ற இழிவான கருத்துக்களைக் கூறும்போது, அவர்கள் குறிப்பிடும் பெண்ணை சங்கடப்படுத்துவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் சொந்த மனநிலையையும், மோசமான வளர்ப்பையும், அடிப்படை மனிதப் பண்பின்மையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இது மரியாதைக் குறைவானது மட்டுமல்ல. இது மனித குலத்திற்கே ஒரு அவமானம். மேலும், நினைவில் கொள்ளுங்கள், மரியாதை என்பது ஒருபோதும் ஒருவழிப் பாதை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சை கண்டித்து விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அவரின் உருவ பொம்மை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவிசண்முகம் பேச்சுக்கு  திமுக பெண் எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது தொகுதியில் பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடுமையான கண்டனத்தைக்கூட தெரிவிக்காமல், மேலோட்டமாக அவர் பேசியது, அவர்மீதான மாண்பை குறைத்துள்ளது. அவரது செயலுக்கு  சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

[youtube-feed feed=1]