சென்னை:  பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்,.பி.யும், திமுக கழக துணைப்பொதுச் செயலாளரு மான ‘சசிகலா புஷ்பா புகழ்’  திருச்சி சிவாக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளர்.

கல்விக்கண் திறந்த காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியதுடன், தான் பேசியதை விவாதப் பொருளாக்கி, பெரிதுபடுத்த வேண்டும் என்றும் கெஞ்சியுள்ளார்.

திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, சென்னை பெரம்பூரில்  நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்  காமராஜர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பேசும்போது,  “மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் காமராஜர் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லை யென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய கலைஞர் உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” என தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடக்காத ஒன்றை நடந்ததாக சிவா திரித்து பேசியதற்கு காமராஜர் சமுதாய மக்களான நாடார் இன மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ்  கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தனது பேச்சுக்கு திருச்சி சிவா வருத்தம் தெரிவித்து, அதை பெரிதுபடுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் காமராசர் குறித்து தான் பேசியதற்கு விளக்கம் அளித்து எம்பி திருச்சி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன.

நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

“குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!” என்று எழுதிய பேரறிஞர் அண்ணா – காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான்,

மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல. நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் – கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!

இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!

இவ்வாறு கூறியுள்ளார்.

காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பித்த தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்…