சென்னை: எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த கோகுலம் சிட்பண்ட்ஸ் அதிபர் கோகுலம் கோபாலன் தயாரித்த, மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த  மார்ச் மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாகவும், முல்லை பெரியாறு அணை குறித்தும்,   காட்சிகள் வைக்கப்பட்டதால் வலதுசாரி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பான  காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்பட்டது.

ஆனால், எம்புரான் படத்தில் இடம்பெற்றிருந்த  முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள்  நீக்கப்படாதது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை காட்சிகளை நீக்க கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவொரு கோரிக்கையும்  வைக்கப்படவில்லை என கூறி விவசாயிகள் போராட்டம் அறித்தனர். அதுபோல வைகோ உள்பட சில கட்சிகள் மட்டும் கேரளாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  எம்புரான் படத்தில் இருந்து முல்லை பெரியாறு தொடர்பான  சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக,  படத்தை தணிக்கை செய்யும் சென்சார் அமைப்பு, அதை நீக்காத நிலையில், அரசின் கவனத்துக்கு வந்ததும், அக்கா காட்சி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள்  நீக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.