சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அப்போதைய அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார்.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில், பொன்முடியின் வெறுப்பு பேச்சு பெண்களுக்கு எதிராக மட்டுமின்றி மத உணர்வை புண்படுத்தும் வகையிலும் இருப்பதால் அவர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சவுந்தரபாண்டியன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதால் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென கோரினார்.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மே 12-ம் தேதிக்கு தள்ளி வைத்து, அன்றைய தினம் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]