சென்னை: அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பள்ளியில், மூடப்பழக்க வழக்கம் பற்றி பேச யார் அனுமதி அளித்தது என கேள்வி எழுப்பியதுடுன், மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் ஒரு பேச்சாளர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பகுத்தறிவுக்கு விரோதமாக கருத்துகளை கூறியிருக்கிறார்.
கல்வியறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் மூட நம்பிக்கையை வளர்ப்பவர்கள் சமூக அக்கறையில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள். அங்கே உரையாற்றிய பேச்சாளர் குறிப்பிட்ட மத உணர்வை தூண்டுகிற சனாதன கருத்துகளை பகிரங்கமாக மாணவிகள் மத்தியில் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.