சென்னை: சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் மாற்று வழியில் செயல்படுத்தி, 2025ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இச்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சேலம் வரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சாலையானது காஞ்சிபுரத்தில் 59 கி.மீ. துாரம், திருவண்ணாமலை 123 கி.மீ. துாரம்; கிருஷ்ணகிரியில் கி.மீ. துாரம், 2; தர்மபுரியில் 56கி.மீ. துாரம் சென்று இறுதியாக சேலம் மாவட்டத்தில் 36 கி.மீ துாரம் வரை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1,900 ஹெக்டேர் பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு சேலம் உட்பட 5 மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். திமுக., பாமக உள்பட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்ததுடன், வழக்குகளும் தொடரப்பட்டன.
இதையடுத்து, சென்னை சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வு, 2020ம் ஆண்டு டிசம்பர் 8ந்தேதி அன்று சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறியதும், மத்தியஅரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து மீண்டும் சென்னை சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் பேசிய மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை நிதின் கட்கரி, 2025க்குள் திட்டம் முழுமை பெறும் என, அறிவித்தது. இதனால் தமிழக அரசும் வேறு வழியின்றி இத்திட்டத்துக்கு சம்மதம் கொடுத்தது. ஆனால், இது விவசாயிகளின் நிலத்தை பாதிக்காமல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்போது என்னை நிலை எடுத்தோமோ, அதை நிலைதான தொடர்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னை சேலம் பசுமை வழிச்சாலைக்கான பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 8வழிச்சாலைக்கு பழைய திட்ட மதிப்பீடான, 10 ஆயிரம் கோடி ரூபாய் தற்போது 12 ஆயிரம் முதல் 14ஆயிரம் கோடி ரூபாயாக உயர உள்ளது. மேலும், செலவை அதிகரிக்காமல் இருக்க, சுற்று வட்ட சாலை குறைப்பு, விவசாய நில பாதிப்பை தவிர்ப்பது, வனப்பகுதியை ஒட்டிய பகுதி, அரசுக்கு சொந்தமான நிலம் வழியாக திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சாலை அமைப்பதில் பல மாற்றங்களையும் கொண்டு வர திட்டமிப்பட்ட உள்ளதாகவும், 50 கி.மீ., துாரத்துக்கு மேல் நீட்டித்தும் திட்டம் மாற்றப்பட உள்ளது என்றும், பழைய திட்டப்படி இந்த சாலை முடியும் பகுதி, சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை, அரியானுாரில் இணையும்படி இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்து, அதே தேசிய நெடுஞ்சாலையில், மகுடஞ்சாவடி அடுத்த வைகுந்தத்தில் இணையும்படி திட்ட வரைபடம் தயாரிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் 2025ம் ஆண்டுக்குள் முடித்து நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.