ஈரோடு: சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

 திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு அடுத்த மாதம் 27- ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பாக திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றனர். இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து,  தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணையம், ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கிய நிலையில், தற்போது,  தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள், 1800 425 94890 என்ற இலவச தொடர்பு எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுழற்சி முறையில் பணியாளர்கள் இதில் இருப்பார்கள் எனவும், வரும் புகார்களை பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிப்பார்கள் எனவும் தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.