டெல்லி: பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் போது, 26 ரஃபேல் விமானங்களை வாங்குவது உள்பட ரூ.90ஆயிரம் கோடி மதிப்பிலான பல பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நாளை (ஜூலை 14ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தேசிய தேசிய தின கொண்டாட்டங்கள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஜூலை 14 அன்று நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்ற பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
நாளை நடைபெறும் பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்கும் பிரதமா் நரேந்திர மோடி பின்னர் அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாட்டுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபா் மேக்ரான், பிரதமா் எலிசபெத் போா்ன், செனட் மற்றும் பிரான்ஸ் தேசிய பேரவையின் தலைவா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துவார் என்றும், பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இந்திய முப்படைக் குழுவின் 269 வீரா்களும் பங்கேற்கின்றனா் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிரதமரின் இந்தப் பயணத்தின்போது சுமாா் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், கூடுதலாக 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் பயணத்தை முடித்து இந்தியாவுக்குத் திரும்பும் பிரதமா் மோடி, வழியில் ஜூலை 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறாா். அப்போது, அந்நாட்டு அதிபரும் அபுதாபி அரசருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.