சென்னை:
சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 5 இல் சிஎம்பிடி முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் வழித்தடம் 3-இல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்டப் பிரிவில் உள்ள அனைத்து மெட்ரோ இரயில் பாதைப் பணிகளுக்கான கட்டுமான ஒப்பந்தம் திருவாளர் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.340.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-இல் 35 மெட்ரோ இரயில் நிலைய இருப்பு பாதைகளில் தண்டவாளங்கள் அமைப்பது மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகையான பணிகளும் இதில் அடங்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் எஸ். அசோக் குமார், (தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளர் குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்) மற்றும் திருவாளர் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் துணைத் தலைவர் வணிகத் தலைவர் சுனில் கட்டார் மற்றும் திட்ட மேலாளர் டி. ஆனந்த் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது உடனிருந்தனர்.