பீஜிங்
தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் சீனாவில் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உலகின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். வுகான் மாகாணத்தில் தொடங்கிய இந்த பரவல் சீனா முழுவதும் பரவி தற்போது உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் சீனா தனது நாட்டில் கொரோனா முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறியது. ஆயினும் கடந்த ஓரிரு மாதங்களாகச் சீனாவில் மிகச் சிறிய அளவில் கொரோனா பாதிப்புக்கள் பதிவாகி வந்தன. இதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளே காரணம் எனச் சீன அரசு தெரிவித்து தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் கூறியது.
இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி சீனாவில் கடந்த இருதினங்களாக சீனாவில் புதிய பதிப்புக்கள் எதுவும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. நேற்று முன் தினம் இங்கு 15 பேருக்கு அறிகுறி இல்லாத தொற்று பதிவான நிலையில் தொடர்ந்து இரண்டாம் நாளாக ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை.