சென்னை: கோவை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் பிஎஃப்ஐ அமைப்பினர் நடத்தும் வன்முறை தாக்குதல்களை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ள நிலையில், கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமனம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
கோவை மாநகர் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து துவேசம் காரணமாக தொடங்கிய பதற்றம், அவரை எதிர்த்து பாஜகவினர் பேசிய பேச்சு, அதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், பாஜக மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது, இதற்கிடையில் பி.எஃப்.ஐ அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு போன்றவற்றால் கொங்கு மண்டலம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து, பிஎப்ஐ அமைப்பினர், பாஜக, இந்து முன்னணியை குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், கோவையில் பதற்றம் நிலவி வருகிறது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. இந்து முன்னணி மற்றும் பாஜகவினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கோவைபுதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக – கேரள கேந்திர பொறுப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். அதுபோல கோவை குனியமுத்தூர் இடையார்பாளையம் சுப்புலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத்.பாஜகவை சேர்ந்த பரத் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இரவு 11.30 மணியளவில் அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபோர்டு காரின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். இதில் காரின் மேல் பகுதியில் இருந்த கவர் எரிந்து நாசமானது. மேலும் காரின் மீதும் தீ பரவியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சிசிடிவியின் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
இதையடுத்து கோவையில் காவலர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.