கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
அதேபோல் முன்னெப்போதும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணை ஜூன் மாதத்திலேயே முழுகொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் வழக்கமாக ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் கே.ஆர்.எஸ். அணை நாளை திறக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஹொகேனக்கல் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.