மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமகா ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியது. இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதற்கிடையில் மழை பெய்ததால், நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி, வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 13ந்தேதி) காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 89.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,445 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதுபோல ஒகனேக்கல்லுக்கு, நேற்று பிற்பகலில் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 19,000 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. ஆனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சிலர், ஆற்றில் பாதுகாப்பான பகுதிகளில் குளித்தனர்.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது, மேட்டூர் அணையில் நீர்மட்டம் 89.92 அடியாகவும், நீர் இருப்பு 52.55 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.