சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றிலிருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனால் ஏரிகள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் குளம் குட்டைகளும் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், சென்னையை சுற்றி உள்ள மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.