சென்னை: சுதந்திர தினத்தையொட்டி  3 நாட்கள்  தொடர் விடுமுறை வந்ததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது. அதன் மூலம்  கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர்  பேருந்துகளில் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகஸ்டு 15 சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. நேற்று முன்தினம் (14.08.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படியும் மற்றும் நேற்று (15.08.2025) அதிகாலை 3 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 1,160 சிறப்புப் பேருந்துகள் என 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,78,860 பயணிகள் பயணம் செய்தனர்.

13-ந்தேதி தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் மற்றும் 436 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,35,040 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலம் கடந்த 13.08.2025 முதல் 15.08.2025 அதிகாலை 3 மணி வரை 5,780 பேருந்துகளில் 3,13,900 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.