சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழகஅரசு.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத் தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளன. சென்னை மாநகரில் உள்ள முக்கிய சுரங்க பாதைகள் அனைத்தும் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளதாலும் பல சாலைகளிலும் தண்ணீர் 5 அடி உயரம் வரை தேங்கி உள்ளதாலும், போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலமாக நீர் அகற்றப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டத்தில் இருந்து 300 தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறைகள் உடனடியாக களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக சென்னை உள்பட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாலும், சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் ஆவின் ,பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.