சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள எந்தவொரு சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கினாலும் உடனே அகற்றப்பட்டு வருவதால் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் நள்ளிரவு முதலே மழை பெய்து வருவதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் போக்குவரத்து நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள எந்தவொரு சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை என காலை 8 மணி அளவில் சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள #சென்னைவாசிகளே, சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் தெளிவாக வும், வாகனங்கள் செல்ல திறந்ததாகவும் உள்ளன. GCC நிர்வாகத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை என தெரிவித்து உள்ளது.
மேலும், அவசர உதவிக்கு 1913 எண்ணை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளது,
அத்துடன், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் களத்தில் இறங்கி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், அது தொடர்பாக புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு சில மாவட்டங்களில் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையில் சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 15ந்தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் இரவு முதலே மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்குவது தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.