மதுரை: நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மதுரை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

தமிழத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து 3 மாணவர்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து, அறிக்கை வெளியிட்ட சூர்யா, கொரோனா காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதிதான் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவதுதான் வேதனை. நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கிறது என்று அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என   நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அளித்துள்ள புகாரில், “நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கையில் நீதிமன்ற மாண்பை கெடுக்கும் வகையிலான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.