தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டுமென எஸ்.பி.ஐ. வங்கி அளித்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ. வங்கியை கடுமையாக விமர்சித்துள்ளது.
தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஆணையிட்ட உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு அநாமதேயமாக நிதி வழங்கியவர்கள் குறித்த தரவுகளை மார்ச் 6ம் தேதிக்குள் வழங்குமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அதனை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பகிரவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த விவரங்களை வெளியிட ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று மார்ச் 4 ம் தேதி எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையை இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
எஸ்.பி.ஐ. வங்கியால் முடியாத வேலையை நாங்கள் வழங்கவில்லை அவர்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் வேலையை செய்ய அவகாசம் கேட்பது ஏன் ? என்று எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சால்வே-விடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐ.யால் இந்த தரவுகளை எடுப்பது கடினமான காரியமா ? 26 நாட்களாக எஸ்.பி.ஐ. வங்கி என்ன செய்து கொண்டிருந்தது ? என்றும் கேட்டனர்.
தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்.பி.ஐ. வங்கியிடம் சிறிது நேர்மையை எதிர்பார்க்கிறோம், நடைமுறை பிரச்சனைகளைக் கூறிக்கொண்டு இருக்காமல் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தவிர, தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளதுடன் இந்த விவரங்களை மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.