சென்னை:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறப்பது தொடர்பாக கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மீது தனியார் சுயஉதவி கல்லூரிகள் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கில், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் உறுதி அளித்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக  சிண்டிகேட் அமைப்பு  பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றி வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியது.

இதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள்  சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்பட 8 பேருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  இதனால் கோபம் அடைந்த நீதிபதி கிருபாகரன்,   மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.