புதுடெல்லி:
74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர் என்று ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவிலான ஊரடங்கை நீக்கிய பின்னர், கார்களை வாங்குவது பல நுகர்வோருக்கு முன்னுரிமையாக மாறும் என்றும், பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் தங்கள் காரை சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,100 க்கும் மேற்பட்ட பதிலளித்தவர்களின் மாறுபட்ட மக்கள்தொகை கலவையை உள்ளடக்கிய இந்த ஆய்வில், முதல் முறையாக வாங்குபவர்களில் 57 சதவீதம் பேர் தாங்கள் சொந்தமாக கார் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தற்போதுள்ள 57 சதவீத கார் உரிமையாளர்கள் தங்களது காரை மேம்படுத்தி கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆய்வில், 26 சதவீத பதிலளித்தவர்கள் பரவலான தொற்றுநோயால் வாகனம் வாங்குவதை தள்ளி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தூண்டப்பட்ட தேசிய ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார் மதிப்பீடு மற்றும் நிதி போன்ற டிஜிட்டல் சேனல்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை ஒருங்கிணைக்க கார் உரிமையாளர்கள் விரும்புவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது
வாகன வகையின் விருப்பத்தைப் பொறுத்தவரை, 37 சதவீத வாங்குபவர்கள் ஹேட்ச்பேக் காரகளை வாங்க வாய்ப்புள்ளது என்றும் அந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் 29 சதவீதம் பேர் காம்பாக்ட் வகைகளை (செடான் / எஸ்யூவி) விரும்புவதும் தெரிய வந்துள்ளது.
முதல் முறையாக காரை வாங்கத் திட்டமிடும்பவர்களில் 56 சதவீதம் பேர் தினசரி பயணத்திற்கு காரை வாங்க விரும்புகின்றனர் என்பதையும் ஊரடங்குக்கு பின்னர் 57 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்து தேர்வு செய்வார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நிச்சயமற்ற தன்மையைத் தவிர, மெட்ரோ நகரங்களில் உள்ள பெரும்பான்மையான இந்தியர்கள் தேசிய ஊரடங்குக்கு பின் வாகனங்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் முறையாக வாங்குபவர்கள் வாங்கும் செலவு குறைவாக இருப்பதால், சொந்தமான கார் வாங்குவதை விரும்புவார்கள், அதே நேரத்தில் கார் வைத்திருப்பவர்கள் புதிய கார் வாங்குவதற்கு விருப்பம் காட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.