சென்னை: கட்டுமானப் பணி காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.

சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேல் 2ம் கட்ட வழித்தட கட்டுமானப் பணிகளால் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதிகள் வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்டப் பணிகள் காரணமாக, வருகிற செப். 15 முதல் 19 வரையிலான நாள்களில் கோயம்பேடு – அசோக் நகர் இடையில் காலை 5 மணிமுதல் 6 மணிவரையில் ரயில் சேவை இருக்காது.
மேலும், அதே ஒருமணி நேரத்தில் விமான நிலையம், செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல, சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில்களும் கோயம்பேடு வரையில் மட்டுமே இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த இடைப்பட்ட நேரத்தில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு – அசோக் நகர் இடையே 10 நிமிட இடைவெளியில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த ஒரு மணி நேரத்தைத் தவிர்த்த மற்ற நேரங்களில் வழக்கமான ரயில் சேவையே இருக்கும்.