சென்னை: கொரோனா ஊரடங்கு பாதிப்பினால் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பல வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் வருவதற்கு மறுத்து வருவதால், கட்டுமான நிறுவனங்கள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கின்போது, அதுவரை குறைந்த ஊதியத்தில் கடுமையாக உழைத்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வரவில்லை. மிகவும் மோசமாக நடந்துகொண்டன.
இதனால், பசியால் வாடிய தொழிலாளர்கள், வேறுவழியின்றி தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர் சொல்லொணா துயரங்களை அனுபவித்து. இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு தமிழகத்திலுள்ள சில கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதனால், தங்களிடம் முன்பு பணியாற்றி, தற்போது சொந்த ஊர்களில் உள்ள தொழிலாளர்களை தொடர்புகொண்டு, மீண்டும் வந்தால் கூடுதல் ஊதியம் தருவதாகவும், தமிழகம் வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறியுள்ளன அந்நிறுவனங்கள்.
ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்ப வருவதற்கு மறுத்துவிட்டதாகவும், பீகாரைச் சேர்ந்த சில தொழிலாளர் குழுக்கள் மட்டுமே மீண்டும் வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், அதேசமயம், சில மாதங்கள் கழித்து, கொரோனா நிலைமை சீரான பிறகுதான் வருவோம் என்றும் அவர்கள் கூறியதாக அந்நிறுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொழிலாளர்கள் அளித்த இத்தகைய பதிலால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.