சென்னை:
விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, சதியை வெளிக் கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடுத்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற ஒரு கடுமையானதும் முக்கியமானதுமான குற்றச்சாட்டை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

அதிமுக அரசுக்கு எழுதிய கடிதத்திலேயே அவ்வாறு அவர் குறிப்பிட்டிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில், அதிமுக அமைச்சர்களே அப்போது சுட்டிக்காட்டிய சதியை விசாரித்து முடித்து வெளியிடுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தயாராக இல்லை; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதைச் சிறிதும் விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகிறது.

ஜெயலலிதா அம்மையார் 5.12.2016 அன்று மறைவெய்தினார். அப்போது, முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். பிறகு அவருக்கும் சசிகலாவுக்கும் பதவி மற்றும் வேறு சில பிரச்சினைகள் வெடிக்கவே, 2017 பிப்ரவரி 7-ம் தேதி திடீரென்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மவுன விரதம் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதை ‘தர்மயுத்தம்-1’ என்று கூறி, ஏதோ அதர்மத்தை அழிக்க நடந்ததாகச் சொல்லப்படும் மகாபாரத யுத்தம் போல வெளி உலகத்தை ஏமாற்றுவதற்காகச் சொல்லி, கோமாளிக் கூத்து ஒன்றை அரங்கேற்றம் செய்தார்கள்.

அந்தச் சுயநல, கபட நாடகத்தைத் துவக்கிய போது ஓபிஎஸ், ‘சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்தக் குழப்பப் புகைமூட்டத்திற்கிடையே முதல்வராக்கப்பட்டு முடிசூட்டிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனைப்படி, சிறைக்கு அனுப்பப்பட்டார். அரசியல் நோக்கத்துடன், இருதரப்புக்கும் பஞ்சாயத்து செய்தது பாஜக. இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து, நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று பழனிசாமி அறிவித்தார்.

பாஜக செய்த பஞ்சாயத்தில், 21.8.2017 அன்று, ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணையப் போகிறார்கள் என்றதும், அன்று மதியம் 1.15 மணிக்கு, மும்பையில் இருந்த தமிழக ஆளுநர் வித்யாசகர்ராவ் சென்னைக்குப் பறந்தோடி வந்தார்.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு அணிகளும் இணைந்ததாக, மாலை 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில், அதாவது, 3.30 மணிக்கு, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பார் என்று ஆளுநர் அலுவலகம் அறிவித்தது. மாலை 4.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று சிபிஐ விசாரணை கேட்டு விட்டு, அதற்கான உத்தரவுகள் ஏதும் இல்லாமலேயே, துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டதும், ‘தர்ம யுத்தம் – 1’ என்பதை ஓபிஎஸ் முடித்துக் கொண்டு அமைதியாகி, வழக்கமான அவரது காரியங்களில் கவனம் செலுத்தலானார்.

தமிழக ராஜ்பவன் வரலாற்றில் தனியொரு அரசியல் கட்சியின் பஞ்சாயத்தை சுமூகமாக நடத்துவதற்காக, மும்பையிலிருந்து மாநில ஆளுநர் விமானத்தில் வந்து இறங்கியது அதுதான் முதல் முறையாக இருக்குமென்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு ராஜ் பவனின் நாகரிகம் மாசுபடுத்தப்பட்டது.

அந்த ஆளுநரின் அவசரத்தை உணர்த்தும் வகையில், துணை முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஒரு மணி நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தை மறந்து, சிபிஐ விசாரணையைக் கைவிட்ட ஓபிஎஸ் துணை முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதம் கழித்து, அதாவது, 25.9.2017 அன்று,ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷனை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.

அந்த ஆணையத்தை அமைத்த 25.9.2017 தேதியிட்ட அரசு ஆணை எண் 817-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

37 மாதங்கள் அதாவது பன்னிரெண்டு மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்னும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து, அறிக்கை வரவில்லை. அறிக்கையைப் பெற்று அதன் மேல் நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கமிஷன் நீட்டிப்பிற்கான அரசு ஆணையில் மட்டுமே முதல்வர் பழனிசாமி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் முதல் குற்றவாளி என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் குற்றம்சாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 20.12.2018 அன்று ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.

அந்த அழைப்பாணையை ஏற்று, அவர் இன்றுவரை, 22 மாதங்களாக விசாரணைக்கே ஆஜராகவில்லை. ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்த மறு மாதமே, அதாவது, பிப்ரவரி 2019-ல் விசாரணைக்குத் தடை கோரி, உயர் நீதிமன்றத்தை நாடியது அப்பல்லோ மருத்துவமனை. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஏப்ரல் 2019-ல் தடையுத்தரவு பெற்றது அப்பல்லோ மருத்துவமனை.

இந்தத் தடையை நீக்கும் வழிவகை தெரியாமல், 18 மாதங்களாக, ‘சட்டப் போராட்டப் புலி’ பழனிசாமி பதுங்கிக் கிடக்கிறார்; பம்மாத்து செய்கிறார்!

முதல் ரவுண்டில் ‘தர்மயுத்தம்’ நடத்தி, துணை முதல்வர் பதவி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் இப்போது, ‘தர்ம யுத்தம்-2’ என்று மிரட்டினார். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் சம்மனை நினைவூட்டியதாலும், வேறு சில காரணங்களினாலும், ஒரே வாரத்தில் பழனிசாமிக்கு முதல்வர் வேட்பாளர் என்று ஆசி வழங்கி, கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, இரண்டாவது தர்ம யுத்தத்தையும் முடித்துக் கொண்டு, அமைதியாகி விட்டார் பன்னீர்செல்வம்! வழக்கமான கடமையில் வேகம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

எனவே, ஜெயலலிதா மரணத்தை வைத்து, ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையில் இந்த நான்கு வருடங்களாக ஒரு நாடகம், பல பாகங்களாக அரங்கேறி நடக்கிறதே தவிர, ஒரு முன்னாள் முதல்வரின் மரணத்தில், மூச்சுக்கு முன்னூறு தடவை ‘ஜெயலலிதாவின் ஆட்சி’ என்று குறிப்பிடப்படுபவரின் மரணத்தில், அதிமுக அமைச்சர்களே குற்றம்சாட்டிக் கொண்ட சதி குற்றச்சாட்டு பற்றி இன்னும் விசாரித்து முடிக்கவில்லை. விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையமும் 3 வருடங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில்தான் விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ஆகியோர் மீது குற்றம்சாட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டு, தற்போதுள்ள அதிமுக அமைச்சர்களோ, ஜெயலலிதா மறைவால் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமோ, இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமியோ தங்கள் பதவி சுகத்திற்கு இந்த விசாரணை ஆணையத்தை முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, அந்த அம்மையாரின் மரணத்தில் உள்ள சதியைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

அந்தச் சதி பற்றி விசாரித்தால், போயஸ் தோட்டம், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ராஜ்பவன் என ஒரு நீண்ட அத்தியாயமாக மாறி விடும்; அதுதான் அதிமுக அரசு காட்டும் தயக்கத்திற்கான காரணம் எனப் பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால், ‘ஜெயலலிதாவின் அரசு’ என்று, ஊரை ஏமாற்றுவதற்காக அடிக்கடி கூறி, கூட்டு சேர்ந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக, இந்த விசாரணைக் கமிஷனை பெயருக்காக அமைத்து, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதவி சுகத்தை முன்னிறுத்தி, தங்கள் தலைவியின், ஒரு முதல்வரின் மரணத்தில் உள்ள சதியை மறைக்க, அரசியல் விளையாட்டு நடத்தி வருகிறார்கள்.

இவர்கள், ‘ஜெயலலிதா’ என்பதையும், விசாரணை என்பதையும், அர்த்தமற்றவையாக ஆக்கியிருக்கிறார்கள். தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும், நான் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரங்களில் கூறியபடி, மறைந்த ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்!” என்று அதில் தெரிவித்துள்ளார்.