சம்மத உறவு குற்றமாகாது…

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.

18 வயது பூர்த்தியாகாத ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் ஒருவனுக்கு (காதலனுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம்.

ஆனால் சம்பந்தப்பட்ட பெண் 18 வயது பூர்த்தியாக வெறும் 19 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதோடு பெண்ணின் சம்மதத்தின் பெயரிலேயே உறவு நடந்திருக்கிறது என்பதால் இது குற்றமாகாது என்று தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

18 வயது பூர்த்தியாகா விட்டாலும் அந்த வயதின் விளிம்பில் இருக்கிற ஒரு பெண்ணுக்கு தன்னுடைய செயல்களால் தனக்கு என்னென்ன நடக்கும் என்பதை அறியும் மனநிலை தெளிவாகவே இருக்கும் என்கிறார் நீதிபதி ஜி.கே. இளந்திரையன்.

இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு போன் வராத 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகம் வேறு இப்போது இருக்கிற உலகம் வேறு.

ஒரு வயது குழந்தைக்கே டி.வி.ரிமோட் எது செல்போன் எது என்று நன்றாக தெரிகிறது. அந்த அளவுக்கு நவீன தொழில் நுட்பங்கள் குழந்தை பருவத்தில் இருந்தே சுற்றி விளையாட ஆரம்பித்துவிட்டது.

16 வயது சிறுவன் 36 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கினாலும் அவனை சிறுவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

சிறுமிகள் என்று குறிப்பிடப்படும் வயதில் உள்ளவர்களில் முதிர்ந்த வயது பெண்ணின் சிந்தனைகளை பெறாதவர்கள் மிக மிகக் குறைவு.

உளவியல் மற்றும் மருத்துவ ரீதியான விஷயங்களின் அடிப்படையில் அணுகுவது மட்டுமே இந்த வயது நம்பர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டும்.