டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி கொடுத்ததாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.. இதுதொடர்பாக டெல்லி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது டெல்லி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் கொடுத்தது யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
பிரபல மோசடி மன்னன்ரும் தரகருமான சுகேஷ் சந்திரசேகர் என்பவர் முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி உட்பட உயர்மட்ட நபர்களிடம் 200 கோடி மிரட்டிப் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குக் கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களை வாங்கிக்கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக முடக்கப்பட்ட அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரனின் புரோக்கராக செயல்பட்டு, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்திலும் கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், ஹவாலா பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் டெல்லி ஆத்ஆம்மி அரசின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறை பாதுகாப்புக்கு ரூ.10 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக, பிரபல தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி கே சக்சேனாவுக்கு அனுப்பிய கடிதத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சித் தலைவரை தனக்குத் தெரியும் என்று சந்திரசேகர் கூறினார். தென்னிந்தியாவில் அவருக்கு ஒரு முக்கியமான கட்சி பதவி வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ. 50 கோடி வழங்கப்பட்டதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “2017ல் நான் கைது செய்யப்பட்ட பிறகு, நான் திகார் சிறையில் அடைக்கப்பட்டேன், சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் பலமுறை என்னைச் சந்தித்தார். 2019ல் மீண்டும் ஜெயின் என்னைச் சந்தித்தார், அதன் செயலாளர் என்னிடம் ரூ.10 கோடி கொடுத்ததாகவும், அதில் இருந்து, ஒவ்வொரு மாதமும் 2 கோடி ரூபாய் பாதுகாப்புப் பணமாகவும், சிறைக்குள் அடிப்படை வசதிகளைப் பெறவும்” கொடுக்கப்பட்டது, என்று சந்திரசேகரின் கையால் எழுதப்பட்ட கடிதம், அவரது வழக்கறிஞர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த மாதம் சிபிஐ விசாரணைக் குழுவிடம் ஜெயின், ஆம் ஆத்மி மற்றும் டி-ஜி சிறைச்சாலைகளுக்கு செலுத்தப்பட்ட பணம் குறித்து தெரிவித்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி உட்பட உயர்மட்ட நபர்களிடம் பணம் பறித்ததாகக் கைது செய்யப்பட்டார். முதலில் இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திகார் சிறையில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அதனால் தன்னை வேறு சிறைக்கு மாற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்ததால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திகார் சிறையில் இருந்து டெல்லியில் உள்ள மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், பின்னர் அக்டோபர் மாதம் அக்டோபர் 19 அன்று, தன்னை மண்டோலி சிறையில் இருந்து மாற்றக் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, மாநில கவர்னர், இதுதொடர்பாக, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பிரிவுக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. சிறை வளாகத்திற்குள் இருந்து சந்திரசேகர் நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சிண்டிகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிறைத் துறையின் 82 அதிகாரிகளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.