டெல்லி ரோகினி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அதற்காக மாதம் ரூபாய் 1.5 கோடி செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றவியல் பிரிவு துணை ஆணையர் வீரேந்தர் செஜ்வென் அளித்த புகாரை தொடர்ந்து சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 81 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் சார்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் தற்போது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக இவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தை சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் தரம் சிங் மீனா மொபைல் போனில் இருந்து எடுத்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக தரம் சிங் மீனா உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
சிறையில் தனி வசிப்பிடம் ஏற்படுத்திக்கொடுக்க, மொபைல் போன் உள்ளிட்ட சகல வசதிகளையும் அனுபவிக்க உதவிய அனைவருக்கும் அவர்களின் பதவி வித்தியாசமின்றி மற்றும் அந்த மாதம் பணிக்கு வந்த நாட்கள் கணக்கு ஏதுமின்றி அனைவருக்கும் பணம் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
தவிர தனது அறைக்கு வெளியே இருக்கும் சி.சி.டி.வி. கேமரா மூலம் தனது அறை தெளிவாக தெரியாதபடி அந்த சி.சி.டி.வி. கேமரா முன்பு திரை சீலை அமைத்தும் அதன் முன்பு தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளை அடுக்கி வைத்தும் மறுத்துள்ளனர்.
2021 ம் ஆண்டு ஜூலை 14 முதல் 2021 ஆகஸ்ட் 14 வரை உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரியவந்தது, மேலும் அந்த அறையை கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. காமெராவை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்த உடன் தனக்கு ரோகினி ஜெயிலில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன்னை டெல்லிக்கு வெளியே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சிறையில் சுகேஷ் சந்திரசேகர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் இதற்கு சிறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் கூறி வேறு சிறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் 81 மீது ஊழல் தடுப்புச் சட்ட பிரிவு 7/8ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.