டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், தமிழகம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்  இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.

நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பலகட்டங்களாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி,  அஸ்ஸாம், மேற்குவங்காளம்,  கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் தோல்வியை சந்தித்தன.  இது காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திது. இதுகுறித்து, கடந்த சில நாட்களுக்குமுன்பு நடைபெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று  நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு சோனியா தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தி, பிரியங்கா, மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.  இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.