மணிப்பூர்
நாகா மக்களுடன் நடக்கும் அமைதிப் பேச்சு வார்த்தையில் அம்மாநில புவியியலை மாற்றும் ஒப்பந்தத்தை காங்கிரஸ் எதிர்க்கும் என மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நாகா மக்களுடன் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ”நாகா மக்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு விரைவில் எட்டப்பட உள்ளது. ஆனால் இது குறித்து எவ்வித ஒப்பந்தமும் முடிவு செய்யப்படவில்லை. அசாம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் நாகா மக்களுடன் கலந்தாய்வு நடந்த பிறகே இது குறித்து இறுதி ஒப்பந்தம் உருவாகப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவருமான ஓ இபோபி சிங், “ஊடக தகவல்களின்படி மணிப்பூருக்குத் தனிக் கொடி மற்றும் தனிச்சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிய வந்துள்ளது. எனவே மணிப்பூர் மக்கள் தனி நாகாலாந்து கோரிக்கைக்கு அரசு ஒப்புக் கொண்டதா என்பது தெரியாத நிலையில் உள்ளனர். “ எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று இது குறித்து ஆலோசிக்க ஆறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்ட குழு மாநிலத்துக்குச் சென்றுள்ளது. இந்தக் குழு நாகா மக்களுடனான பேச்சு வார்த்தை குறித்து மக்களுடனும் எதிர்க்கட்சி தலைவர்களுடனும் கருத்துக்களைக் கேட்க உள்ளது. அத்துடன் இந்தக் குழு தேசிய குடியுரிமை பட்டியல் குறித்தும் கருத்துக் கேட்க உள்ளது. இந்தக் குழுவில் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், ஜீதேந்திர சிங், மாணிக்கம் தாகுர், ரஞ்ஹித் முகர்ஜி மற்றும் முகமது அலி கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராம் ர்மேஷ், “மத்திய அரசு நடத்திய இந்த பேச்சு வார்த்தை எவ்வித வெளிப்படைத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை. இந்த பேச்சு வார்த்தைகளில் பேசியவை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் ஏற்படும் ஒப்பந்தம் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநில புவியியலில் மாற்றம் உண்டாகும் என்றால் அதை காங்கிரஸ் எதிர்க்கும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவரது பதவிக் காலத்தில் அசாம், மிசோரம் மற்றும் திரிபுரா ஒப்பந்தங்களை புவியியலில் மாறுதல் இன்றி அமைத்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.