புதுடெல்லி:
லடாக் எல்லையில் சீன ராணுவம் உடனான மோதலில் ராணுவ அதிகாரி உட்பட இந்திய 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் மற்றும் இராணுவப் படைவீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்ததாக அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி, பிரதமரிடம் விளக்கமளித்தனர்.
இந்நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதே அளவில் சீன தரப்பிலிருந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் 20 பேர் உயிரிழந்த தகவலை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர் என்றும் ராணுவம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில் “இந்த சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதால் இது மிகவும் கவலைக்குரியது. மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கள நிலவரம் குறித்து சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்“ எனக் கூறினார்.