மஹாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. கடந்த 8ம் தேதி தனது முதலமைச்சர் பொறுப்பை பட்னாவிஸ் ராஜினாமா செய்த நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற கட்சியான பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைத்திருந்தார். ஆனால் ஆளுநர் அழைப்பை பாஜக நிராகரித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சிவசேனா தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரப்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.