டில்லி,

நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பாரதியஜனதாவின் குதிரை பேரம் காரணமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமை, மீதமுள்ள  44  காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை யும்  பெங்களூரு அழைத்து வந்து ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.

இந்த முறை குஜராத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் நோட்டா முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் காரணமாக, ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டுப்போடும் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு  நாளை(ஜூலை3) விசாரணைக்கு வர உள்ளது.