கோழிக்காடு: கம்யூனிஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி, சகோதரி பிரியங்காவுடன் பேரணி வந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அளிவிக்கப்பட்ட முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று  வேட்புமனு தாக்கல் செய்தார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல்காந்தி அங்கு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில்,  மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ் கட்சி சார்பில், கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி  ஆனி ராஜா களமிறங்க உள்ளார். இதையடுத்து,  வயநாட்டில் போட்டியிடுவதில் இருந்து ராகுல்காந்தி ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், இது பொருத்தமற்ற செயல் என கடுமையாக விமர்சித்தார்.

ஆனால், அதை கண்டுகொள்ளாத ராகுல்காந்தி, இன்று : தொண்டர்கள் புடைசூழ தனது சகோதரியுடன் பேரணியாக வந்து,  வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் பேரணியின்போது தொண்டர்கள் ராகுல் காந்தி, ராகுல்காந்தி என கோஷமிட்டனர்.

முன்னதாக இன்று காலை ராகுல் காந்தி தனது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்காவுடன்  கேரளாவுக்கு  வந்தார், கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், இரு தலைவர்களும் ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றனர், அங்கு அவர்களுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரு தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் வயநாடு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மனு தாக்கல் செய்தனர்.

இதையடுதது,  வயநாட்டில், பொதுமக்களிடையே பேசிய  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் எனக்கு அன்பும், பாசமும், மரியாதையும் அளித்து, என்னைத் தங்களின் சொந்தப் போல நடத்தினார்கள் என உணர்ச்சி பொங்க பேசினார்.  இங்கு, “மனித-விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி பிரச்னை உள்ளது. இந்த போராட்டத்தில் வயநாடு மக்களுடன் நான் நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம். முதலமைச்சருக்கு கடிதம் எழுதினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லியில் எங்களுக்கு ஆட்சி அமைந்தால், கேரளாவில் ஆட்சி அமைந்தால், இந்த இரண்டையும் செய்வோம், இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

முன்னதாக, வயநாட்டில் சிபிஐ வேட்பாளர் அன்னி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் இங்கு காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்பியும் வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார். பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இங்கு களமிறங்கி உள்ளார். இதனால் போட்டி கடுமையாக உள்ளது.

வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!