பாட்னா
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் அக்கட்சியின் நிறுவனர் லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவர் பாஜகவுக்கு எதிராக உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு ஏற்கனவே பாரட்டுக்களை தெரிவித்திருந்தார்.
கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் இருந்தது. திருணாமுல் காங்கிரஸ் 34 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 4 இடங்களில் வெற்றி கிடைத்தது.
தேஜஸ்வி யாதவ் இன்று ஒரு பேட்டியில், “கடந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் இடத்தை பெற்றது. இந்தியாவின் பழமையான கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாகும். எனவே எதிர்க்கட்சிகள் இணைந்து அமைக்க உள்ள மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டும். இதில் தவறேதும் உள்ளதாக நான் கருதவில்லை. அதன் மூலம் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொ ரு கருத்து இருக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆகவே காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கினால் மாநில கட்சிகளின் கருத்துக்கேற்ப நடந்துக் கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப தேர்தல் அறிக்கைகளை தயார் செய்ய வேண்டும். காங்கிரஸ் சற்று பலவீனமாக உள்ள மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுக்கு அதிக இடம் அளிக்க காங்கிரஸ் முன் வர வேண்டும்.
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாதது அந்தக் கட்சிகளின் விருப்பம் ஆகும். இது குறித்து நான் எதுவும் சொல்ல இயலாது. பீகாரில் அந்த இரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணியில் ராஷ்டிரியஜனதா பங்கு பெறுமா என இப்போது சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரை பாஜகவை முறியடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைவது அவசியமாகும்” என தெரிவித்துள்ளார்.