லக்னோ:
பாஜ.வுக்கு எதிரான போராட்டத்திற்கு இப்போது காங்கிரஸ் கட்சி தக்காளியை கையில் எடுத்து உள்ளது.
பா.ஜ ஆளும் உ.பி. மாநில சட்டப்பேரவைக்கு வெளியே வண்டியில் தக்காளியை கொண்டு வந்து மலிவு விலையில் காங்கிரஸ் கட்சியினர் விற்பனை செய்தனர். சமையலுக்கு தேவையான தக்காளி ஒரு கிலோ ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மழை காரணமாக தக்காளி வருகை குறைந்தது. இதனால் இந்தியாவில் முக்கிய நகரங்களில் தக்காளி விலை ரூ. 100 வரை உயர்ந்தது.
தக்காளி விலை உயர்வை கண்டித்து உ.பி.யில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்காளியை சேமித்து வைக்க தனி வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கிக்கு ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ’ என பெயர் சூட்டப்பட்டது.
விவசாயிகள் தக்காளியை இந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாஸிட் செய்யலாம். தக்காளி லோனும் வழங்கப்படும். அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படும். காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கேலி செய்யும் விதத்தில் இந்த விநோத போராட்டத்தை தொடங்கினர்.
உ.பி. காங்கிரஸ் தலைவர் சைலேந்திர திவாரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சட்டபேரவைக்கு முன்பு தள்ளு வண்டியில் தக்காளியை கொண்டு வந்தனர். தக்காளிக்கு நல்ல நாட்கள் வந்துள்ளது என்ற பேனர் இருந்தது. அங்கு தக்காளியை காங்கிரஸார் ரூ. 10க்கு விற்பனை செய்தனர்.
‘‘தக்காளி விலை உயர்வுக்கு எதிரான எங்களுடைய போராட்டம் இது. நாங்கள் மக்களின் மீது கவலை கொண்டு மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்கிறோம். தக்காளி விலை குறைவுக்கு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என திவாரி கூறினார்.