டெல்லி

பிரதமர் மோடியின் திறமையின்மையால் இன்றைய முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இன்று முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் சமீபத்தில் வெளியான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதுகலைலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பிரதமரின் திறமையின்மையை காட்டுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில்,

“உயிரியல் ரீதியில் பிறக்காத பிரதமர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் திறமையின்மையால், தினந்தோறும் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது”

என்று பதிவிட்டுள்ளார்.