டில்லி
காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தலுக்கான நான்காம் வேட்பாளர் வெளியாகி உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்கள் நடைபெறுகின்றன. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. கடந்த 7 ஆம் தேதி வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் 16 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த பட்டியலில் சோனியா காந்தி ரேபரேலியிலும் ராகுல் காந்தி அமேதியிலும் போட்டியிடுவதாக காணப்பட்டது.
அதற்கு பிறகு 21 பேர் அடங்கிய இரண்டாம் பட்டியலும் 16 பேர் அடங்கிய மூன்றாம்பட்ட்டியலும் வெளியாகியது. இந்த பட்டியல்களில் அசாம், தெலுங்கானா, மேகாலயா, உ பி உள்ளிட்ட மாநிலங்களின் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று 27 தொகுதிகளுக்கான நான்காம் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் கேரளாவின் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சசி தரூர் திருவனந்த புரத்திலும், சபரிமலை உள்ள பட்டனம்திட்டா தொகுதியில் ஆண்டோ ஆண்டனியும் போட்டி இடுகின்றனர். தற்போதைய எர்ணாகுளம் மக்களவை உறுப்பினர் கே வி தாமசுக்கு பதிலாக ஹிபி ஈடன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
அருணாசலப் பிரதேச மேற்கு தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் நபாம் துகி அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அந்தமான் தொகுதியின் வேட்பாளராக குல்தீப் ராய் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தவிர சத்தீச்கர் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும் உ பி யில் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.