டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதுடன், 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதைய நிலையில் 15,69,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தொற்று பாதிப்புக்கு மூத்த அரசியல் கட்சித் தலைவவர்களும் உள்ளாகி வருகின்றனர்.
தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டில், ‘கொரோனா பரிசோதனையில் இன்று காலை எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அரியானா மாநில பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 2009 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அரியானா மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஆவார். தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
திக்விஜய் சிங்கின் டிவிட்டில், எனக்கு கொரோனா பாசிடிவ் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் டெல்லியில் உள்ள வீட்டில் தனிமையில் இருக்கிறேன். இந்த சமயத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, உரிய பரிசோதனைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.