டில்லி
மகாத்மா காந்தியை சுட்டதை மீண்டும் நிகழ்த்தி காட்டிய அகில பாரத இந்து மகாசபையை எதிர்த்து காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி இந்தியாவில் பலரும் மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நாடே துக்கத்தில் ஆழ்ந்து இருந்தது. இந்த நாளில் காந்தி உருவ பொம்மையை மீண்டும் துப்பாக்கியால் சுடும் நிகழ்ச்சியை இந்து அமைப்பான அகில பாரத இந்து மகாசபை நடத்தியது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”நாடெங்கும் காந்தியின் 71 ஆவது நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் உத்திரப் பிரதேச அகில பாரத இந்து மகாசபை உறுப்பினர்கள் காந்தி உருவ பொம்மையை சுட்டு விழா நடத்தி உள்ளனர். காந்தியை கொன்ற கோட்சேவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அத்துடன் ”மகாத்மா கோட்சே வாழ்க” என்னும் கோஷத்துடன் அவர்கள் காந்தியின்உருவ பொம்மையை எரித்து கொண்டாடி உள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் இது போல செய்கைகள் நடப்பதற்கு அந்த கட்சியின் ஆசிகள் உள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. வலது சாரியினருக்கு ஆளும் கட்சி அளுக்கும் ஆதரவினால் அந்த குழுவினர் நமது தேச தந்தை மகாத்மா காந்தியை அவமானப்படுத்துகின்றனர். அவருடைய மதசார்பின்மை, அகிம்சை சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த அமைப்பினர் செயல்படுகின்றனர்.
இந்த செய்கையை வன்மையாக கண்டிக்கும் வகையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 4) அன்று காங்கிரஸ் கட்சி ஒரு மாபெரும் போராட்டம் நடத்த உள்ளது. நாடெங்கும் நடைபெறும் இந்த போராட்டம் காலை 10 மணிக்கு அனைத்து மாநில தலைநகரிலும் காந்தி சிலைகள் அருகே நடைபெறும். இந்த போராட்டத்தில் இந்த செய்கையை கண்டிக்கும் மற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் போர்டுகளும் இடம் பெறும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.